Encrypting your link and protect the link from viruses, malware, thief, etc! Made your link safe to visit.

வில்லியம் ஹார்வி - William Harvey

ST

இதயம் துடிக்கும் வரை மட்டும் தான் நாம் உயிர் வாழ முடியும். இதயம் துடிப்பது நின்றுவிட்டால் இரத்த ஓட்டமானது நின்றுபோய் விடும் இதனால் நம் உயிரும் நம்மை விட்டு பிரிந்து விடும் என்பது அறிவியல் நமக்குச் சொல்லும் ஓர்  உண்மை. ஆனால் 400 ஆண்டுகளுக்கு முன்னர் இவ்வுண்மையை இவ்வுலகம் அறியாத ஓர் அதிசியம். அக்காலத்தில் உயிரியல் வல்லுனர்கள் இரத்த ஓட்டம் பற்றி மற்றும் இதய செயல்பாடுகள் பற்றி தவறான நேர்மறையான எண்ணங்களை கொண்டிருந்தனர். உதாரணமாக நாம் உண்ணும் உணவானது இதயத்தில் சென்று இரத்தமாக மாறுகிறது என்றும், இதயமானது இரத்தத்தை சூடாக்க பயன்படுகிறது என்றும், இரத்த நாளங்களில் காற்று தான் இருக்கிறது என்றும், இரத்தமானது சிலநேரங்களில் இதயத்தை உள்நோக்கியும், சிலநேரங்களில் இதயத்தில் இருந்து வெளி நோக்கியும் பாய்கிறது என்ற உண்மைக்கு முரண்பாடான பல்வேறு கருத்துகளைக் கொண்டிருந்தார்கள். இதயமானது இரத்தத்தை உடல்முழுவதும் செலுத்துகிறது. இரத்தமானது உடலுக்குள்ளேயே திரும்பத்திரும்ப பயணம் செய்கிறது என்ற உண்மையை முதன்முதலாக இவ்வுலகிற்கு கண்டறிந்து கூறியதன் மூலம் மருத்துவத்துறையின் தலையெழுத்தை மாற்றியமைத்த ஓரு அற்புதமான மருத்துவ மேதையைப் பற்றி நாம் தெரிந்துகொள்ளப் போகிறோம். 15 நூற்றாண்டுகளுக்கும் மேலாக பல்வேறு மருத்துவர்களால் நம்பப்பட்டு  வந்த கூற்றை பொய் என்று நிரூபித்து உடல் கூறியியலுலகின் மிக முக்கிய சிறந்த நூலை எழுதிய அந்த மருத்துவ மேதை வில்லியம் ஹார்வி (William Harvey).1578-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் நாள் இங்கிலாந்திலுள்ள போல்க்ஸ்டோன் (Folkestone) எனும் ஓர் ஊரில் பிறந்தார் வில்லியம் ஹார்வி. அவரின் தந்தை மிகவும் வசதிமிக்க வியாபாரி.இதனால் இவர் மிகப் புகழ்பெற்ற கிங்க்ஸ் (King's School) பள்ளிக்கும், கேம்ப்ரிட்ஜ் (Cambridge) பல்கலைக்கழகத்திற்கும் சென்று தனது படிப்பை பயின்றார். பல்கலைக்கழகத்தில் ஹார்வி அவ்வளவாக பிரகாசிக்கவில்லை. எனவே, அப்போது அவர் மருத்துவவுலகின் மிகவும் முக்கியமான உண்மையை கண்டுபிடிக்கப்போகிறார் என்று அவரின் பேராசிரியர்கள் யாரும் நினைத்திருக்கமாட்டார்கள். ஆனால், பிரகாசிக்கவில்லையென்றாலும் கடும் உழைப்பை கொடுக்கக்கூடியவர் ஹார்வி. 1597-ம் ஆண்டு ஹார்வி மருத்துவம் பயில அக்காலக்கட்டத்தில் உலகின் தலைசிறந்த மருத்துவ பல்கலைக்கழகமாக விளங்கிய இத்தாலியின் 'University of Padua' என்ற பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். அப்பல்கலைகழகத்தில் மருத்துவ பட்டம் பெற்ற பிறகு இங்கிலாந்து திரும்பினார். மறுபடியும் கேம்ப்ரிட்ஜ் பல்கலைகழகத்தில் கல்வி கற்றார். பின்னர் சொந்தமாக தனது மருத்துவப் பணியைத் தொடங்கினார். 1609-ம் ஆண்டு  St. Bartholomew's மருத்துவமனையில் ஹார்வி சேர்ந்தார். அம்மருத்துவமனையில் அவரிடம் சிகிச்சை பெற்ற பல நோயாளிகளிடமிருந்து பல்வேறு தகவல்களைச் சேகரிக்கத்தொடங்கினார் ஹார்வி. உடலில் இரத்தத்தின் வேலை குறித்து மற்றும் இரத்த ஓட்டம் குறித்து அதுவரை நம்பபட்டு வந்த அனைத்தும்  தவறானது என்று ஹார்வி நம்பினார். ஆனால், அத்தவறுகளின் உண்மை அவருக்கு உடனடியாக புரியவில்லை உண்மையை அறிந்துகொள்ள பல ஆண்டுகள் ஆராய்ச்சிகள் பல மேற்கொண்டார். மனிதர்கள், விலங்குகள், பறவைகள், தவளைகள், பாம்புகள், எலிகள் மற்றும் முயல்கள் இவற்றின் சடலங்கள் பலவற்றை அறுத்து பொறுமையுடன் ஆராய்ச்சி செய்தார். இரத்தம் பற்றி மற்றும் மனித உடற்கூறுகள் பற்றிய அதுவரை எழுதபட்டிருந்த அனைத்தையும் ஒன்று கூட விடாமல் மிகவும் கவனமாக படித்தார். இரத்த நாளங்களில் வால்வுகள் காணபடுகின்றன என்ற உண்மையை  'Hieronymus Fabricius' என்ற மருத்துவரின் வாயிலாக அறிந்துகொண்டார். ஆனால், அவ்வால்வுகளின் பணியை எவரும் புரிந்திருக்கவில்லை. இரத்தமானது ஒரே திசையில் மட்டும் செல்வதை அவ்வால்வுகள் நிருபிக்கின்றன என்பதை ஹார்வி உணர்ந்தார். அடுத்தபடியாக ஒவ்வொரு முறையும் இதயம் துடிக்கின்ற போதெல்லாம் இரண்டு அவுன்ஸ் இரத்தம் அது வெளியேறுகிறது என்பதை அவர் கணித்தார். இதயம் ஒரு நிமிடத்திற்கு தோராயமாக 72 முறை துடிக்கிறது. அதாவது, 60 விநாடிக்கு 144 அவுன்ஸ் (அ) 60 நிமிடத்திற்கு 540 பவுண்ட் இரத்தமானது இதயத்திலிருந்து வெளியேற வேண்டும். ஆனால், 540 பவுண்ட் என்பது மனிதனின் சராசரி எடையை விட மிக அதிகம். எனவே, இரத்தமானது இதயத்தில் இருந்து பாய்ந்து உடல் முழுவதும் ஒரே திசையில் பயணித்து மீண்டும் இதயத்திற்குள் நுழைந்து மீண்டும் பாய்ந்து செல்கிறது என்று அவர் அனுமானித்தார்.அதாவது, இதய இயக்க இரத்தமானது உடல் முழுவதும் பாய்ந்துகொண்டு இருக்கிறது என்று நினைத்தார். அவருடைய நம்பிக்கையை உறுதி செய்ய அடுத்த 9 ஆண்டுகள் மிகவும் கடுமையாக உழைத்து இரத்த ஓட்டத்தைப் பற்றி பல சோதனைகளை மேற்கொண்டார். தனது கண்டுபிடிப்பை புத்தம் ஆக வெளியிடுவதற்கு 12 ஆண்டுகளுக்கு முன்னர் ஹார்வி அதைப்பற்றிய விரிவுரைகளை வழங்கினார். ஆனால், அவருக்கு அப்போது உதாசீனமும், ஏளனச்சிரிப்பும் தான் கிடைத்த பரிசுகள்.



 1628-ம் ஆண்டு தனது 50-வது வயதில் "An anatomical disquisition on the motion of the heart & blood in animals" என்னும் ஒரு நூலை வெளியிட்டார். மருத்துவ உலகம் முழுவதுமே ஸ்தம்பித்து போனது. பதினைந்து நூற்றாண்டுகளுக்கும் மேலாக நம்பபட்டு வந்த பலவற்றை கேலி கூத்தாக மாற்றியதால் அது பலரின் கண்டனத்திற்கு உள்ளானது. அவரிடம் சிகிச்சைப் பெற வருபவர்களின் எண்ணிக்கையானது வேகமாக குறைந்தது. ஆனால், 1000 கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவது இல்லை என்பதைப்போல ஹார்வியின் கூற்றை பொய்யாக மாற்ற வேண்டும் என்று நினைத்தவர்கள் அனைவரும் மண்ணை தோல்வியைத் தழுவினர். ஹார்வி கண்டுபிடித்தை கூறியதும் மறுக்க இயலாத உண்மை என்பதை மருத்துவ உலகமே வெகுவிரைவில் உணர்ந்தது. அதன்பின் ஹார்வியின் செல்வாக்கு மற்றும் புகழ் வானம் முதல் வையகம் வரை உயரத் தொடங்கியது. அவரின் மருத்துவ தொழிலானது பிரகாசமாக ஜொலிக்கத் தொடங்கியது. இவைகளில் நிஜமாகவே ஆச்சரியமானது என்ன தெரியுமா? அதைப்போன்ற மிக நுண்ணியக் கண்டுபிடிப்பை நிகழ்த்த மற்றும் உறுதி செய்ய மைக்ரோஸ்கோப் (Microscope) போன்ற நுண்ணியக்கருவி மிக மிக அத்தியாசமானது. ஆனால், ஹார்வியின் காலத்தில் அதைப்போன்ற எவ்விதக் கருவியும் கண்றியப்படவில்லை. நவீனகால மருத்துவ ஆராய்ச்சிகருவிகள் எதுவுமில்லாமல் உடற்கூறியியல் வரலாற்றில் மிக சிறப்பு வாய்ந்த உண்மைகளை ஹார்வி கண்டறிந்து சொன்னதுதான் இவ்வுலகம் உண்மையிலேயே போற்றிப் பாராட்ட வேண்டிய விந்தை.ஆரம்பக் காலத்தில் ஹார்வியின் கூற்றை மிகவும் எதிர்த்த ஐரோப்பிய ராயல் மருத்துவகழகம் பின்னர் அம்மருத்துவ மேதையின் திறமைக்கு தலைவணங்கியது. 1654-ஆம் ஆண்டு மருத்துவத்துறையில் மிக உயரிய கெளரவத்தை அவருக்கு வழங்க விரும்பியது. கழகத்தின் தலைவர் பதவியை பெற்றுக்கொள்ளுமாறு ஹார்வியிடம் வேண்டிக்கொண்டது. ஆனால், புகழ் மற்றும் அங்கீகாரத்தை ஒருபோதும் எதிர்பாராத ஹார்வி, அக்கெளரவத்தை மறுத்து விட்டார். அதற்குப் பதில் ஹார்வி அக்கழகத்திற்கு நிறைய நல்புத்தகங்கள் அடங்கிய நூலகம், அரும் பொருளகம் (ம) ஆராய்ச்சி அறைகளுடன் கூடிய ஒர் புதிய கட்டடத்தைக் கட்டிக்கொடுத்தார்.



 உடற்கூறியலுலகின் மாபெரும் கண்டுபிடிப்பை நிகழ்த்திய ஹார்விக்கு முடக்குவாத நோயானது தாக்கியது. 1657-ம் ஆண்டு ஜூன் 3-ம் தேதி 79-வது வயதில் அம்மேதையின் உயிரானது உடலை விட்டு பிரிந்துச்சென்றது.ஹார்வியின் குடும்ப வாழ்க்கையானது மகிழ்ச்சியானதாக அமைந்திருந்தாலும், ஹார்வி தம்பதியிருக்கு குழந்தைகள் இல்லை. அதனால் அவரது முழுச்சொத்தையும் அவர் ராயல் மருத்துவக்கழகத்தின் மேல் எழுதி வைத்தார். இடைவிடாத ஆய்வுகள் மூலம் இயற்கையினது ரகசியத்தைக் கண்டறிந்து வெளியிடுமாறு ராயல் மருத்துவக்கழக உறுப்பினர்களுக்கு வேண்டுகோள் வைத்தார். கழகத்தில் வருடந்தோறும் விரிவுரை நிகழ்த்தத் தேவையான நிதியை ஒதுக்கினார். சுமார் 350 வருடங்களுக்கும் மேலாக இன்றுவரை வருடந்தோறும் ஹார்வி விரிவுரை நிகழ்த்தப்படுகிறது. மருத்துவவுலகம் இம்மாமனிதருக்குச் செய்யக் கூடிய வருடாந்திர அஞ்சலி. மனித உடல் பற்றிய இரகசியம் மற்றும் உண்மைகள் ஆகியவற்றைக் தெரிந்து நம் அறிவை வளர்த்துக்கொள்வதன் மூலமாக நோய் மற்றும் வலி ஆகியவற்றை நாம் வெற்றிக்கொள்ள வேண்டும் என்பது வில்லியம் ஹார்வியின் நீண்ட உயரிய வாழ்நாள் இலக்காக இருந்தது.நினைத்துக்கொண்ட இலக்கினை நோக்கி தெளிந்த சிந்தனையோடும், கடும் செயல்திறத்தோடும், கடுமையான உழைப்பினோடும், மிகுந்த விடாமுயற்சியோடும் பயணம் செய்ததால் அம்மனிதரின் வாழ்க்கை அர்த்தமுள்ளதாக மாறியது, அவருக்கு மருத்துவவுலகத்தில் அவரது மிகப்பெரிய இலக்கை அடைந்தார். இன்னும் மனிதக்குலம் கண்டறியப்பட வேண்டிய உண்மைகள் மற்றும் செல்ல வேண்டிய இலக்குகள் நிறைய இருக்கிறது. அதைத்தேடி தன்னம்பிக்கையுடன் பயணம் செய்யும் அனைவரும் அவரது இலக்கை அடைய முடியும் என்பதே சுமார் 350 ஆண்டுகளுக்கு முன்னர் வில்லியம் ஹார்வி எல்லாருக்கும் சொல்ல விரும்பும் இதயப்பூர்வமான உண்மையாக இருக்கும்.