Encrypting your link and protect the link from viruses, malware, thief, etc! Made your link safe to visit.

புளோரன்ஸ் நைட்டிங்கேல் ("The Lady with the Lamp")

ST

 மனிதனாக பிறந்த அனைவரும் ஒருநாள் மரணத்தை சந்தித்தே ஆக வேண்டும்.இருபினும் மரணம் எவருக்குமே மகிழ்ச்சியை கொண்டு வருவதில்லை. மரணத்தை தள்ளிப் போடவோ (அ) தடுக்கவோ ஒரு துறையால் முடியும் என்றால் அந்த துறை மருத்துவதுறை மட்டும்தான். அதனால் தான் மருத்துவர்களை சில நேரங்களில் கடவுளுக்கு இணையாக ஒப்பிட்டு பார்க்கின்றனர். மரண வாசல் வரை சென்று திரும்பி வருபவர்களும், அவர்களது குடும்பத்தினரும். மருத்துவர்களுக்கு கிடைக்கும் அந்த கெளரவம் அவர்களுக்கு உறுதுணையாய் இருக்கும் உதவியாளர்களுக்கும் கிடைக்கிறதா? என்பது மிகபெரிய கேள்வி தான். ஆனால் ஆயிரமாயிரம் தன்னலம் அற்ற தாதியர்களை இந்த உலகம் சந்தித்து இருக்கிறது என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை. அந்த தாதியர்களுக்கு எல்லாம் முன்னொடியாக விளங்கிய ஒரு அதிசய பெண்ணைப் பற்றிதான் தெரிந்துகொள்ளபோகிறோம்.



'விளக்கேந்திய நங்கை' என்று அழைக்கப்படும் புளோரன்ஸ் நைட்டிங்கேல் (Florence Nightingale) இத்தாலியில் உள்ள புளொரன்ஸ் (Florence) நகரில் 1820 ஆம் ஆண்டு மே மாதம் 12-ஆம் தேதி பிறந்தார். அவரது பெற்றோர் மாபெரும் செல்வந்தர்கள். சமூக (ம) அரசியல் தலைவர்களிடம் நெருக்கமான தொடர்பு கொண்டவர்கள். தங்களைப் போன்று தங்கள் இளைய மகளும் செல்வ செளகரியமான வாழ்க்கை வாழ வேண்டும் என்று அவர்கள் விரும்பினார்கள். ஆனால் சுகபோக வாழ்க்கையில் சிறிது நாட்டம் கூட இல்லாத புளோரன்ஸ் தன் வாழ்நாளில் மனிதகுலத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று சிறுவயதில் இருந்தே கனவு கண்டார்.


அவரது பெற்றோர்கள் ஆரம்ப காலத்தில் அதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்தாலும் சிறிது காலத்தில் புளோரன்ஸின் உயர்ந்த கொள்கைக்கு முன்பு அவர்களின் எதிர்ப்பு இருந்த இடமே தெரியாமல் போனது. அவர் 31-ஆவது வயதில் தனது குடும்பத்தின் செல்வத்தையும், சுகபோக வாழ்க்கையை துறந்து நோயாளிகளையும், போரில் காயமடைந்தவர்களையும் கவனித்து கொள்ளும் தனது நீண்ட நாள் இலக்கை நோக்கி புறப்பட்டு சென்றார். இங்கிலாந்தை பொருத்தவரையில் அக்காலத்தில் தாதிமை தொழில் என்பது பல மக்கள் அருவறுத்து ஒதுக்கிய ஒரு துறையாக இருந்தது. சமூகத்தின் விரும்பத்தகாத பிரிவுகளை சேர்ந்தவர்கள் தான் தாதியர் பணியை ஆற்ற வந்தனர். 



அக்காலத்தில் தாதியர்களுக்கு பயிற்சி அளிக்க மாட்டார்கள். தாதியர்களுக்கான சம்பளமும் கூலிகளுக்கு கிடைப்பதைவிட மிகக் குறைவாக இருந்தது. படிப்பறிவு இல்லாதவர்கள் சுத்தம் என்பது என்னவென்று தெரியாதவர்களாகவும், ஒழுக்கக்கேடான செயல்களில் ஈடுபடுவோர்களாகவும் இருந்தனர். இவர்கள் தான் தாதியர்கள் வேலை செய்தனர். இந்த துறையைத் தான்தான் மாற்றியமைக்க வேண்டும் என்று துணிந்தார் புளோரன்ஸ். 


ஜெர்மனியிலும், பிரான்ஸிலும் தாதியர்களுக்கு உண்டான அடிப்படை பயிற்சியைப் பெற்றார். அந்த பயிற்சியை வைத்து அவர் பிரிட்டிஷ் மருத்துவமனைகளை மாற்றியமைக்க முயற்சித்தார். ஜெர்மனியில் அவர் பயிற்சியை மேற்கொண்டபோது தன்னைத்தானே வருத்திக்கொண்டார். அதிகாலையில் எழுந்து எல்லா பணிவிடைகளையும் செய்தும், எளிய உணவுகளை பகிர்ந்துகொண்டும், தாதியர்களுக்கான விரிவுரைகளுக்கும் சென்று வந்தார். நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும்போது மிகமுக்கிய அம்சங்கள் தூய்மையும், தூய்மையான காற்றும்தான் என்று மிகவும் நம்பினார் அவர். எனவே அக்கால வழக்கத்திற்கு மாற்றாக காற்றோட்டமாக இருக்க வேண்டும் என்பதற்காக மருத்துவமனை கட்டடங்களில் பெரிய சன்னல்களை அமைக்க வற்புறுத்தினார். மேலும், தற்போதைய தாதிமை தொழிலிலுள்ள பெரும்பாலான நடைமுறைகளை அவர்தான் முதன்முதலாக சிந்தித்து செயல்படுத்தினார்.


அவரது சிந்தனைகளும்,உயரிய கோட்பாடுகளும் நாடு முழுவதும் பரவத்தொடங்கின. ஆனாலும் அவரது மாபெரும் தொண்டை உலகமறிய செய்ய ஒரு போர் தேவைப்பட்டது இதுதான் வரலாற்று உண்மை. 1854-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கிரைமியன் போர் (Crimean War) வெடித்தது. போரில் படுகாயம் அடைந்தவர்களையும், உறுப்புகளை இழந்தவர்களையும் கவனிக்கும் முறை என்ற ஒன்று அக்காலத்தில் இல்லாமல் இருந்தது. போர் வீரர்களின் அவலநிலை நாட்டில் கொந்தளிப்பை ஏற்படுத்திய சமயத்தில் அவர்களை எப்படி கவனித்து கொள்ளலாம் என்பதை செய்ய புளோரன்ஸுக்கு அழைப்பு விடுத்தார் போர்க்கால நாடாளுமன்ற செயலாளர் அதனை ஏற்று இங்கிலாந்தின் விக்டோரியா ராணி அவர்கள் ஆசிர்வாதம் வழங்கி அனுப்பினார். 


நவம்பர் 4-ஆம் தேதி போர் முகாம் Scutari-ஐ வந்து அடைந்தார் புளோரன்ஸ். 40 தேர்ந்தெடுக்கப்பட்ட அந்த தாதிகளுடன் அவர் தனது பணியைத் தொடங்கினார். நோயாளிகளை நிர்வகிப்பதில் அவர் வகுத்து தந்த திட்டங்கள் போர்க்காலத்தை அடிப்படையாக உருவாக்கப்பட்டது. அவை மிக கடுமையான ஒழுங்குமுறையை அடிப்படையாக கொண்டது. அதனை பின்பற்ற தயங்கியவர்களும், செயல்படுத்த தவறியவர்களும் வீட்டிற்கு அனுப்பப்பட்டனர். புளோரன்ஸின் அந்த இரும்புகர நடவடிக்கை அவருக்கு அபரிமிதமான பலனைத் தந்தது. அவர் வருவதற்கு முன் 42 விழுக்காடாக இருந்த மரண விகிதம் வெகுவாக குறைந்து இரண்டு விழுக்காடாக குறைந்தது.


ஒரு நாளுக்கு 20 மணி நேரத்திற்கும் மேலாக நோயாளிகளின் நலனை பார்ப்பதில் செலவிட்டார் புளோரன்ஸ். பல திட்டங்களை வகுத்து தந்ததோடு மட்டுமின்றி சமைப்பது, மருத்துவக் கருவிகளை கழுவி சுத்தமாக்குவது, குப்பைகளை அகற்றுவது மட்டுமின்றி அனைத்து வேலைகளையும் அவர் கைப்படவேச் செய்தார். ஒவ்வொரு இரவும் (அ) ஒவ்வொரு அதிகாலையிலும் கையில் ஒரு விளக்கை ஏந்தியபடி எல்லா வார்டுகளையும் ஒருமுறை சுற்றிப் பார்த்து விட்டு நோயாளிகள் எல்லாரும் அமைதியாக உறங்குவதை உறுதி செய்த பிறகு அவர் உறங்கச் செல்வார். அதனால் தான் வரலாறு அவரை 'விளக்கேந்திய நங்கை' ("The Lady with the Lamp") என்று நினைவில் வைத்திருக்கிறது.அதற்கு நோயாளிகளின் வாழ்க்கையில் விளக்கு ஏற்ற உதவியவர் என்ற இன்னொரு பொருளையும் நாம் எடுத்துக்கொள்ளலாம். 


தனது பணியை செம்மைப் படுத்திக்கொள்ள அவர் மூன்று முறை போர் முனைக்குச் செல்ல தயங்கவில்லை. மிகக் கடுமையாக உழைத்த அவருக்கு கடுமையான நோய் ஏற்பட்டு தனது கூந்தலையும் அவர் இழந்தார். போர்ப்பணி முடிந்ததும் அவர் 1856-ஆம் ஆண்டு இங்கிலாந்து திரும்பியபோது அந்த தேசம் முழுவதும் அவரை கைகூப்பி வணங்கியது. இங்கிலாந்தின் செயிண்ட் தாமஸ் மருத்துவமனையில் நைட்டிங்கேல் என்னும் தாதியர் பயிற்சிப் பள்ளி ஒன்றை நிறுவினார். 1858-ஆம் ஆண்டு 800 பக்க ஒரு அறிக்கை ஒன்றை அவர் வெளியிட்டார். அதுவே பிரிட்டிஷ் இராணுவ சுகாதாரத்திற்கு அடித்தளமாக அமைந்தது. 


தன் வாழ்நாள் முழுவதும் மருத்துவமனை ஊழியர்களின் பணி, மருத்துவப்பொருட்கள் வாங்குவது, மருத்துவமனை உபகரங்களை தேர்ந்தெடுத்தல், தூய்மைப்படுத்துதல், நோயாளிகளுக்கான உடை மற்றும் உணவு ஆகிய அனைத்து விதமான மருத்துவமனை சார்ந்த நடவடிக்கைக்கும் தேவையான அடிப்படை விதிகளை வகுத்துத் தந்தார் புளோரன்ஸ். உலகம் முழுவது அவர் உருவாக்கிய முறைகள் பின்பற்றப்படுகின்றன. அவர் உருவாக்கித்தந்த முறைகள் தான் இன்றைய நவீன தாதிமைத் தொழிலுக்கு, மற்றும் நவீன மருத்துவமனை வசதிகளுக்கு அடித்தளமாக விளங்குகிறது.


தாதிமைத் துறையில் அவரது உயரிய சேவையை பாராட்டி இங்கிலாந்து ராணி 'Order of Merit' என்ற மிக உயரிய பட்டத்தை 1907-ஆம் ஆண்டு அவருக்கு வழங்கி அவரைச் சிறப்பித்தார். அந்த விருதை பெற்ற முதல் பெண்மனி புளோரன்ஸ் என்பது குறிப்பிடதக்கது. அதற்கு அடுத்த ஆண்டு 'Freedom of the City of London' என்ற உயரிய அங்கீகாரத்தையும் பெற்றார்.புளோரன்ஸ் நைட்டிங்கேல் 1910-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13-ஆம் நாள் தமது 90-ஆவது வயதில் இங்கிலாந்தில் காலமானார். அவர் மறைந்தாலும் இன்றும் ஒவ்வொரு தாதியரின் உருவிலும் அவர் உலா வந்துகொண்டிருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். 


அடுத்த முறை நீங்கள் ஒரு தாதியரை சந்தித்தால் அவருக்கு நன்றி சொல்லுங்கள்.அவருக்கு தாங்கள் உதவி செய்ய இயலாவிட்டாலும், அவர்களுக்கு உரிய மரியாதை செலுத்துங்கள். அதற்கும் மேலாக அவரைப் போன்றவர்களை உருவாக்க தமது வாழ்க்கை முழுவதையும் அர்ப்பணித்து வலுவான அடித்தளம் அமைத்த அந்த விளக்கேந்திய நங்கை புளோரன்ஸ் நைட்டிங்கேலுக்கு மனமார்ந்த நன்றி கூறுங்கள். புளோரன்ஸ் நைட்டிங்கேலைப் போல் மனுகுலத்தை ஓர் அங்குலமாவது உயர்த்தி விட வேண்டும் என்று எண்ணுவோருக்கும், எண்ணித் துணிவோருக்கும் எத்தனை தடைகள் வந்தாலும் நிச்சயம் அவர்கள் அவர்களது உயரிய இலக்கை அடைவார்கள்.